குறுந்தொகை 117
கீழடியைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்திய கார்ட்டூன் மனிதர்கள் சாம்ராஜ்யம் அமைத்து விட்டிருந்தனர். பிரமிடுகள், கார்நாக் பெருங்கோயில் எல்லாம் கட்டி முடித்திருந்ததனர். மத்தியக் கிழக்கில் மன்னன் ஒருவன் முந்தைய வரலாற்றை அறியும் நோக்கில் அகழ்வாராய்ச்சி செய்து அருங்காட்சியகம் அமைத்துக் கொண்டிருந்தான். பழந்தமிழர் பெருமை, பேரரசு அமைப்பது, கட்டிடம் கட்டுவது, நகரங்கள் எழுப்புவது ஆகியவற்றில் இல்லை, சங்கக் கவிதைகளில் உள்ளது. ஈராயிரம் ஆண்டுகள் போனபின்னும் தீராத உயிர்ப்பு. குரல் உயர்த்தாத, படம் போட்டு பாகங்கள் குறிக்காத நுண்மை. குறுந்தொகை 117 தோழி கூற்று, நெய்தல் திணை மாரி ஆம்பல் அன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஞெண்டு கண்டல் வேர் அளைச் செலீஇயர் அண்டர் கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன் வாராது அமையினும் அமைக சிறியவும் உள ஈண்டு விலைஞர் கைவளையே - குன்றியனார் மழைக்கால ஆம்பல் மலர் போன்ற தோற்றமுடைய கொக்கு. அதன் பார்வைக்கு அஞ்சிய ஈரமான நண்டு, தாழைப் பொந்தினை அடைவதற்காக, இடையர் கயிறை அறுத்தவுடன் பாய்ந்தோடும் எருத...